54#

 

அன்புள்ள காதலுக்கு,

*இன்று சீக்கிரமே எழுந்துவிட்டேன்

நீ சொன்னதுபோல

செயற்கை வெளிச்சங்கள் ஏதுமற்ற

விடியற்காலை இருட்டில்

உன்னை நினைத்துப் பார்த்தேன்.

எதிரில் உன் புகைப்படம்கூட இருந்தது

ஆனாலும் தோல்விதான்…

அதுதானென்றில்லை.

அந்தத் தலையணை உத்தி உட்பட

எல்லாம் பரிசோதித்தாகிவிட்டது,

எதுவும் பலனளிக்கவில்லை,

கசங்கிய சேலையிலும்

காய்ந்த பூவிலும்

உன்போல ஒரு கவிஞனால் வேண்டுமானால்

திருப்திப் பட்டுக்கொள்ள முடியும்.

 

எனக்கோ என் எதிரில் முழுசாக

உடனே நீ வேண்டும்.

நீ இல்லாமல் எதுவுமே செய்யத்தோன்றவில்லை.

உன் இதயத்துடிப்பு கேட்டுக்கொண்டே

தூங்கிப் பழகிவிட்டதால்

தூக்கமே வரமேட்டேன்கிறது.

 

என்ன செய்வது தலையணைக்கு இதயம் இல்லை.

பூ வைக்கக்கூடத் தோன்றவில்லை.

எத்தனைமுறை பின்னினாலும்

தலை கலைத்து அழகாக்க உனக்குமட்டுமே முடிகிறது.

மேலும் பிய்த்தெறிய ஆளில்லாமல்

என்னத்துக்குப் பூக்கள்?

என் மார்பகத்து நகக்கீறல்களுக்கோ

காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை.

நீ ஊருக்குப் போய் ஒரு வாரத்துக்கெல்லாம்

அவை ஆறிப்போய்விட்டன.

 

(அந்த ஒரு வாரத்துக்குள்

எத்தனை முறை திருட்டுத்தனமாக

ஆடை விலக்கிக் கீறல்கள் பார்த்து மகிழ்ந்தேன்

என்கிறாய் -

சமயத்தில் எனக்கே என் மேல் காதல் வந்து விட்டது)

என்னவெல்லாமோ தெரிந்து வைத்திருக்கும் நீ

அடையாளச் சின்னங்களை

அப்படியே வைத்துக்கொள்ள

வழி ஏதும் சொல்லமாட்டாயா?

நீ `இதுதான் தாலி’ என்று கையில் கட்டிவிட்ட

ஏதோ ஒரு கோவிலின் கயிறுகூட

நிறம் மாறித் தேய்ந்துகொண்டே வருகிறது.

கடைசி இழைக்கு முன்னராவது

கனியவேண்டும் காலம்.

எல்லாவற்றிற்கும் மேலாக

மாடியில் வெறுமனே சிந்தும்

அவ்வளவு நிலவொளியை

நான்மட்டுமே என்ன செய்வது?

 

நீ இருந்தாலாவது என்னை

ஏதாகிலும் செய்து, அதன்பிறகு

அந்த நிலாவெளிச்சத்தை மறக்கமுடியாமல்

செய்து விடுவாய்

இன்னும் மறந்துவிடாத

அந்த சோப்பின் வாசம்போல,

இப்போதும்

குளிக்கச் செல்லும்போதெல்லாம்

கதவைத் தாழிடாமல்தான் செல்கிறேன்.

ஒருவேளை அன்றைக்குப் போலவே

என்றைக்காவது நீ வந்து

பின்புறமாக என் கண்களைப் பொத்திக்கொண்டு

`யார்’ என்று காதில் கிசுகிசுப்பாக

கேட்டுவிடமாட்டாயா என்ன?

 

- காதலி*