53#

அன்புள்ள காதலனுக்கு,

*இன்று காதலர் தினம்.

(காதல் வயப்பட்டவர்களுக்கு என்றைய தினமும்

அவர்களுடையதே என்பது வேறு கதை)

இன்று நீ ஒன்று செய்; இந்த உலகம் முழுவதும் உறங்கிய பின்,

உன் காதுகள் உணரக்கூடிய அனைத்து ஓசைகளும் அடங்கிய பின்

மாடிக்குச் செல், நாம் வழக்கமாக ஊடல் கொண்டபின்

முறையிடச் செல்வோமே, ரோஜாக்களும், ஈரமும் அடங்கிய இருட்டு மூலை,

அங்கிருந்து வானத்தைப் பார்.

நீல இருட்டில் மின்னிக்கொண்டிருக்கும் வெளிச்சப்புள்ளிகள் தெரிகிறதா

இந்த உலகத்தில்

என்றைக்குக் காதல் தோன்றியதோ அன்றைய தினத்திருந்தே அவை இருக்கின்றன.

அவை என்னதென்று தெரிகிறதா, `நட்சத்திரங்கள்’ என்றுனக்குக் கூறப்பட்டிருக்கும்.

இன்னும் தாரகை, விண்மீன் என்றெல்லாம்கூட காதல் அறியாதவர்களும்,

காதலிக்கப்படாதவர்களும் கூறுவர். அல்ல;

அவை ஒவ்வொன்றும் முத்தங்கள்.

இந்த உலகம் தோன்றிய தினத்திலிருந்தே

காதலர்கள் பரிமாறிக்கொண்ட முத்தங்கள்.

 

லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி இன்னும் இந்த வானத்தின் கீழுள்ள அத்தனைக் காதலர்களும் ஏதோ ஒரு தேவகானத்தில் கொடுத்துக்கொண்ட முத்தங்கள்.

ஒவ்வொரு முறை காதலர்கள் முத்தமிட்டுக் கொள்ளும்போதும்

வானத்தில் ஒரு நட்சத்திரம் பூக்கிறது.

அவை கண் சிமிட்டும்போது நீ கூர்ந்து கவனித்தால்

ஒவ்வொரு வெளிச்ச மின்னலிலும் இரண்டு

காதல் வயப்பட்ட உள்ளங்கள், ஒன்றையொன்று எண்ணிக்கொண்டு

ஒன்றிற்காக மற்றொன்று துடித்துக் கொள்ளும் பரிசுத்த ஓசை கேட்கும்.

இனியும் யாராவது மேலே கைகாட்டி `நட்சத்திரம்’ என்று கூறினால்,

அவர்களுக்கு தென்மேற்குத் திசையை சுட்டிக்காட்டத் தவறாதே,

அங்கு எல்லாவற்றையும்விட பிரகாசமாக, உயரத்தில் மின்னிக்கொண்டிருக்கும்

நம் முதல் முத்தத்தை அடையாளம் கண்டுகொள்வதில் உனக்கு அதிகம் சிரமமிருக்காது என்று நினைக்கிறேன்.

இனி எப்போதும் நீ பார்க்கும்போது அது கண் சிமிட்டினால் நினைத்துக்கொள் -

உனக்காக ஒரு ஜீவன் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறதென்று!

 

- காதலி*