52#

அன்புள்ள காதலுக்கு,

*உன்னை எதிர்பார்த்திருந்த மழைவரும் போலிருந்த ஒரு மாலை வேளையில் நீ அனுப்பிய பரிசுப் பொருள் வந்து சேர்ந்தது. உனக்கென்று எங்கிருந்துதான் கிடைக்கிதோ இது போன்ற வித்தியாசமான பரிசுப் பொருள்கள். விஷயத்திற்கு வருகிறேன்.

 

நீ கேட்டதுபோல கைப்பைக்குள் வைக்கும் அளவுக்கு சின்னதாய் குடை வாங்கிவிட்டேன். இனி மழை பெய்துகொண்டிருக்கும்போதுகூட நாம் அய்யாசாமி கடையில் சீனி மிட்டாய் வாங்கலாம்.

 

வான்கோழி குஞ்சு பொரித்துவிட்டது. நான் சொன்னதுபோல் பௌர்ணமிக்குத்தான் பொரித்தது. முதல் குஞ்சை உனக்காக என்று விட்டிருக்கிறேன்.

 

நேற்றுதான் கிடைத்தது நீ தொலைத்த சிகரெட் லைட்டர். சின்னக் கட்டிலுக்கடியில் இருந்தது. கொஞ்சம் சிகரெட்டுகளும விட்டுப் போயிருக்கலாம் நீ.

 

பின் வாசல் ஓடு முழுக்க நிறை பூக்களாய் உதிர்ந்திருக்கிறது.

நீ வந்தால்தான் தொடுப்பதென்றிருக்கிறேன்.

 

அந்த ஊதாப்பூ நைட்டிக்கு பட்டன் தைத்துவிட்டேன்.

எழுந்து அணைக்கப் பொறுமையின்றி நீ உடைத்த

குழல் விளக்கும் மாற்றியாகிவிட்டது.

 

அந்த அணிற்பிள்ளை நன்றாக மரமேறக் கற்றுக்கொண்டுவிட்டது.

அதன்பிறகு சன்னலோரம் அது வரவில்லை.

நீ இல்லையென்பது அதற்கும் தெரிந்திருக்குமோ என்னவோ.

 

வீட்டிற்குப் புதிதாக சுண்ணாம்பு அடித்தார்கள்.

அந்த மூலையைக் காப்பாற்றிவிட்டேன்.

நாம் ஆணியில் கிறுக்கியது இன்னும்அப்படியேதான் இருக்கிறது.

 

மேல்மாடிக்குப் படிகள் வைத்தாகிவிட்டதால் முன்பு போல்

ஏணி தேவைப்படாது.

இரவில் பிறை பார்த்து கண்மூடி உன் முகம் பார்க்க

நீதான் அருகில்இல்லை.

 

தோட்டத்தில் பிச்சிப்பூ கொடிக்கு ஒரு கம்பு ஊன்றிப் படரவிட்டாயே

நினைவிருக்கிறதா?

தொடர்ந்து தண்ணீர் விட்டதில் அந்தக் கம்பு

துளிர் விட்டு முருங்கைச் செடியாகிவிட்டது.

 

இன்னும்,

பாடம் செய்யத பூ, மழைக்காக வர ஆரம்பிரத்துவிட்ட தும்பிகள்,

5ம் நம்பர் ரூட் கண்டக்கடர் மாறியது,

ஒருவழியாக மாம்பழ நிறத்திலேயே கிடைத்துவிட்ட தலைமாட்டி,

உவரிபாளையம் போனபோது பார்த்த உன் போலவே இருந்த ஆள்,

புதிதாய் பதிந்து வைத்திருக்கும் பழைய பாடல்கள் என்று

உன்னிடம் காட்டவும், கூறவுமென்று நிகழ்ச்சிகள் சேகரித்து

என் நினைவுப் பைகள் நிரம்பிவிட்டன.

 

இந்தக் கடிதத்துக்கும் பதிலாக

ஏதேனும் பரிசுப் பொருளை அனுப்பி விடாதே.

அலங்காரமாய் என் எதிரில் சும்மா உட்கார்ந்திருக்கும்

அவை எந்த விதத்திலும் உன்போல் இல்லை.

நீ வந்துதான் செய்யவேண்டுமென்ற காரியங்கள்

இங்கு நிறைய ஆகிவிட்டன.

மேலும் சின்னங்கள் மூலம் சாமியைப் பார்த்து அலுத்துவிட்டது.

நீயே நேரில் வாயேன்!

 

- அன்புடன் காதலி*