50#

அன்புள்ள காதலுக்கு,

*நட்சத்திரங்களைப் பார்த்தால்

பரிமாறிக்கொண்ட முத்தங்களம்,

நிலவ்i பார்த்தால்

நம் அரைகுறையான முதல் காமமும்

நினைவுக்கு வருகின்றன.

எல்லாம் சரிதான்

ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான்

கன்னத்தில் கைவைத்து

தனியாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது?

 

காலையில் கண்விழிக்க எனக்குக் காரணங்கள் வேண்டும்.

 

நீ இல்லாமல் எனக்கு எதுவுமே செய்யத் தோன்றவில்லை.

மஞ்சள் பூசி மறைக்க புதிதாய் காயங்கள் ஏதுமில்லாததால்

குளிக்கக்கூடத் தோன்றுவதில்லை.

அப்படியே குளித்தாலும்

ஆடை மாற்றும் அறைக்குள் இருந்துகொண்டு

பிடிவாதம் பிடிக்க நீ இருக்கிறாயா என்ன?

 

முகத்தோடு முகம் உரசி முத்தமிட்டுக் கொண்டதில் ரொம்பத்தான்

குத்தியது உன் தாடி.

 

நீ இல்லாதபோது உன்னை நினைவுபடுத்தும் சக்தி அந்த °பரிசத்துக்கு

இருப்பது அப்போதே தெரிந்திருந்தால் இன்னும் சில பிரதேசங்களில் முத்தமிட அனுமதித்திருப்பேன் உன்னை.

உதட்டிலாவது சற்று இருத்திக் கடித்திருக்கலாம் நீ. பல் பதித்த ஞாபகம் மட்டுமே மிச்சம்.

 

ஆயினும் உன் விளையாட்டுகள் கொஞ்சம் அதிகம்தான். பல காரியங்களுக்கு வேறு அர்த்தங்கள் கற்பித்துத் தலைகீழாய் புரட்டிப் போட்டுவிடாய் என்னை. நான் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் உன் பாதிப்புகள். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் உன் நினைவுகள். சாப்பாடு மேசை கூட என்னைப் பார்க்கையில் சத்தமின்றி சிரிக்கின்றது. பின்னே அதற்கு அப்படியொரு பயனிருக்குமென்று அது நினைத்துப் பார்த்து இருக்குமா என்ன?

 

காதல் தந்து கனவு தந்த நீ கூடவே காத்திருத்தலையும் தருவது என்ன நியாயம்?

 

அலுத்து விட்ட நிலாக்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் மீண்டும் வேறு அர்த்தம் கற்பிக்க உன்னால் மட்டுமே முடியும். உன் அணைப்புக்காக ஏங்குது உள்ளம். உன்னைத் தொட்டுக்கொண்டே தூங்கிப் போகவேணும். வருவாயா? ஒரே ஒரு விண்ணப்பம். நீ வரும்போது இவற்றையெல்லாம் சிற்றின்பம் என்றவனை அழைத்து வா. அவனிடம் சற்று பேச வேண்டும்.

 

- காதலி*