45#

 

*மழைக்காற்றில்

சன்னல் கதவு அடித்துக்கொணடது

எழுந்து மூடலாம் என்று வந்தால்

கையில் குடையுடன் பூவரச மரத்தடியில் நீ.

இவ்வளவு நேரம்

திறந்திருந்த சன்னல் வழியே

நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பாய்

என்ற நினைப்பு வந்ததும்

சட்டென்று எனக்கு வியர்த்துவிட்டது

பிறகு கேட்டால் சொல்கிறாய்

`உன்னை தூரத்திலிருந்து

நீ அறியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்’ என்று

- உனக்கென்று எங்கிருந்துதான் வருகிறதோ

இதுபோன்ற வித்தியாசமான ஆசைகள்.

அப்படித்தான் யோல் சன்னதியிலும்

கைகுவித்து கண்மூடுமுன் என்

அருகில் இருந்தாய்

கண்களைத் திறந்து தேடினால்

எங்கிருந்தோ நீ

என்னைத் தரிசித்துக் கொண்டு…

அதற்கு நீ தந்த விளக்கம்

எனக்கூட்டிய கிளர்ச்சியில்

நானும் முயன்று பார்த்தேன்

மறைந்திருந்து உன்னைப் பார்த்துக்கொண்டு…

தூரம் அழகுதான் ஒப்புக் கொள்கிறேன்

ஆனால்

உன்னை அருகில் வைத்துக்கொண்டு

என்னால் உன்போல் இருக்க முடிவதில்லை.

எனக்கோ உன்னை எப்போதும்

அணைத்துக்கொள்ள வேண்டும்,

உன் °பரிசத்தை எப்போதும்

உடல் உணரவேண்டும் என்றே தேடுது.

அதற்கு வசதியாக

என் கைகளுக்குள் அடங்குமளவிற்கு நீ

ஒரு குழந்தையாகிவிட்டால்கூட நல்லதுதான்.*