43#

*நினைவிருக்கிறதா?

நீ பல வருடங்களுக்குப் பிறகு

என் வீட்டுக்கு வந்திருந்த

அந்த நவம்பர் மாத

மழை நாட்களை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

சன்னலோரமாக விழும் மழையை

கைகளில் ஏந்தி

நீ விளையாடிக் கொண்டிருந்தபோது

எனக்கும் மழை பிடிக்கும்

எனக் காட்டிக்கொள்ள

நான் எவ்வளவு பிரயத்தனப்பட்டேன் என்று

உனக்கு நினைவிருக்கிறதா?

 

நீ

மணியக்கா வீட்டுக்குப் போகணும்

என்றதும் நான் கடை கடையாகத் தேடி

கேரியர் இல்லாமல் எடுத்து வந்த

வாடகை சைக்கிளை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

முதலில்

என்னைப் பார்க்கவேண்டும்

என்பதற்காக

நான் வந்து எழுப்பும்வரை

தூங்குவதுபோல் நடிப்பாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

நான் சாப்பிட உட்கார்ந்ததும்

`நான் வேணா பரிமாறட்டுமா மாமி’

என்று ஒன்றும் தெரியாததுபோல்

கேட்பாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

பறவையிலிருந்து விடுபட்ட

சிறகை பிடிக்க ஓடி

கீழே விழுந்தோமே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

உனக்குத்

தலை பின்னிக்கொண்டிருக்கும் அம்மா

பார்க்க முடியாது என்ற தைரியத்தில்

எதிரிலிருந்த என்னைப் பார்த்து

கண் சிமிட்டி

எங்கே நீ பண்ணு பார்க்கலாம்

என்று வம்புக்கிழுத்தாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

பின் பக்கமாய் வந்து

கண்ணாடியில்

உன் உருவத்தைப் பார்த்துப் பதிலுக்கு

நான் செய்தபோது

அதுவேறு யாரோ என்பதுபோல

முகத்தைத் திருப்பிக் கொண்டாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

ஒருமுறை

உன் நிறத்திலேயே நானும்

சட்டை போட்டுவந்து

`பார்த்தாயா’ என்று காலரை

தூக்கிவிட்டபோது பார்த்துவிட்ட

அக்காவுக்காக அடிக்கடி

காலரைத் தூக்கிவிட நேர்ந்ததே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

இரவு

கடைசியாக விளக்கை

அணைக்குமுன் நடுவில் படுத்திருக்கும்

எல்லோரையும் தாண்டி

ஒரவரை ஒருவர்

பார்ததுக்கொள்வோமே ஒரு பார்வை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

சுதந்திர தினத்தன்று

உனக்கு நான்

கொடி குத்திவிட்டபோது

அரும்பிய அந்

ஒரு துளி இரத்தத்தை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

ஒரு திருமண வீட்டில்

அதோ அவர்தான்

என்று பார்வையாலேயே

தோழிகளுக்கு என்னை

அடையாளம் காட்டினாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

பந்தியில்

எதிரெதிராக அமர்ந்து சாப்பிடுகையில்

மேசைக்கடியில் நம் கால்கள்

பட்டுக்கொண்டபோது விலக்கிக் கொள்ளாமல்

`அது என் கால் இல்லை’

என்பதுபோல இருவரும்

வேறு வேறு திரை பார்த்தோமே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

நான் உன்மேல்

கோபப்படும்போதெல்லாம்

வேண்டுமென்றே

சத்தமாகப் பாடுவாயே

ஒரு பாட்டு

உனக்கு நினைவிருக்கிறதா?

 

நான் ஊருக்குக் கிளம்புகையில்

துணிகளை பெட்டியில்

அடுக்கிக் கொண்டிருந்தபோது

நான் பார்க்கவில்லை என நினைத்து

உன் மார்புக்குள் சொருகிக்கொண்ட

என் கைக்குட்டையை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

இரயில் நிலையத்தில்

முதன்முதலாக

உன் மனதை…

காற்றில் முடி அலைய

ஒரு தேவதைபோல சாய்ந்துகொண்டு

சொன்னாயே… அந்த கைகாட்டி மரத்தை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

என் முகவரியை

நானே எழுதி

உன்னிடம் தந்துவிட்ட

கடிதத்தாள்களை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

உன்னிடமிருந்து எனக்கும்

என்னிடமிருந்து உனக்குமான

அந்த முதல் கடிதத்துக்காக

நாம் எவ்வளவு நகம் கடித்தோம் என்று

உனக்கு நினைவிருக்கிறதா?

 

உன் வீட்டுக்கு

தொலைபேசி செய்யும்போதெல்லாம்

நம் பெற்றோர்களைத் தாண்டி

நாம் பேசிக்கொள்ள

ஏதேனும் சாக்கு தேடுவோமே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

தொலைபேசியில்

நான் உனக்கு

முத்தம் தரும்போதெல்லாம்

பதிலுக்கு என்ன செய்வதென்று

தெரியாமல்

தேங்க்°·என்று வழிவாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

அடுத்த மழைக்காலத்திலான

நம் இரண்டாவது சந்திப்பில்

`என்னை நினைவிருக்கிறதா’ என்று

நீ கேட்டபோது நான் கூறியது

உனக்கு நினைவிருக்கிறதா?

 

`இந்த டிரெ°

போட்டுக்கறன்னைக்கெல்லாம்

உன்னைப் பார்த்து விடுகிறேன்’ என்று

அடிக்கடி போட்டுக் கொள்வாயே, அந்த

மாம்பழநிறப் பட்டுப் பாவாடையை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

ஒருமுறை

வீட்டில் நாம் தனியாக

இருக்க நேர்ந்தபோது

தேவையில்லாமல்

என் கழுத்தில் கைவைத்துப் பார்த்து

உனக்கு ஜூரம் என்றாயே

நினைவிருக்கிறதா?

 

முத்தம் கேட்டபோதெல்லாம்

`அவிய இருக்காக, இவிய பாக்றாக’

என்று ஏதேனும் சொல்லித் தப்பிவிட்டு

ஒருவாரக் காய்ச்சல் முடிந்து

`தலைக்கு தண்ணி வச்சப்ப’

நீயாக வந்து முத்தமிட்டு ஓடினாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

முதன்முதலில்

நீ என்னுடன்

வண்டியில் வந்தபோது

மேலே பட்டுவிடாமல்

எவ்வளவு கவனமாக

அமர்ந்து வந்தாயென்று

உனக்கு நினைவிருக்கிறதா?

 

அதே வண்டியில்

`என்ன அவசரம் சுற்று வழியில்

மெதுவாகப் போ’ என்று

தோளில் சாய்ந்து கொள்வாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

நாளிதழ் வந்ததும்

உனக்கு நானும்

எனக்கு நீயும்

வார பலன்கள்

பார்ப்போமே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

எல்லோரும் சினிமா பார்க்கையில்

நாம் மட்டும்

அந்தக் காட்சி வந்தபோது

ஒருவரையொருவர்

திரும்பிப் பார்த்துக்கொண்டb

உனக்கு நினைவிருக்கிறதா?

 

உன்

அக்கா கல்யாணத்தில்

`அடுத்த கல்யாணம் இவளுக்குத்தானே’

என்று யாரோ சொன்னபோது

ஏனோ என்னைக் கள்ளத்தனமாய்

பார்த்தாயே ஒரு பார்வை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

துணி உலர்த்த நீ மாடிக்குப்

போகும்போதெல்லாம்

`ஏண்டி இப்படி ஊருக்கே

கேக்குறமாதிரி கத்தற’

என்று உன் அம்மா திட்டுவார்களே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

`ஒரே ஒருமுறை’ என்று

என் சிகரெட் பிடுங்கி

புகைபிடித்து நீ இருமியபோது

பார்த்துச் சிரித்த

அந்த வழிப்போக்கன் முகம்

உனக்கு நினைவிருக்கிறதா?

 

என்னிடம் உனக்கு

என்ன பிடிக்கும் என்று நீ

கேட்டதற்கு நான்

பதில் சொன்ன பிறகு

என்னைக் கடந்து

செல்லும்போதெல்லாம்

பாத்திரம், புத்தகம், கைகள்

என்று எதைக் கொண்டாவது

மறைத்துக்கொண்டாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

இரவில்

மின்சாரம் போனபோதெல்லாம்

அடுத்தவர் காதில் விழாமல்

கிடைத்த சத்தமில்லா முத்தங்களை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

இரவில்

யாரும் அறியாமல்

`சுவரேறிக் குதித்து வந்தபோது

தெரியும்’ என்பதுபோல

கைகட்டி நின்று கொண்டிருந்தாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

பரிமாறும்போது

பார்வை உறுத்தலில் ஏறிட்டுப் பார்த்து

உன் சட்டை பித்தானை

சரி செய்துகொண்டு

`எவ்வளவு திமிர்’ என்பதுபோல்

கோபமே இல்லாமல் முறைத்தாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

முகம் கழுவிய ஈரத்தில்

எனக்கு முத்தமிடப் பிடிக்கும் என்று

வேண்டுமென்றே டவல் எடுக்காமல்

குளிக்கப்போவாயே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

நம் இருவரைத் தவிர

இந்த உலகில்

வேறு எவருமே

இல்லை என்பதுபோல்

ஒருவர் மடியில் ஒருவர்

சுருண்டு கொண்டோமே

அந்த வெள்ளிக்கிழமையை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

அதன் பிறகு

`சரியாகச் சொன்னால் மூன்று முத்தம்’ என்று

முதுகில்

விரலால் எழுதி

விளையாடியதில்

எத்தனை முறை தோற்றேன் என்று

உனக்கு நினைவிருக்கிறதா?

 

`நேத்து யெல்லாரும் ஒறங்குன பெறவு

மச்சில யாரோ

நடமாடுத சத்தம் கேட்டுது’

என்று அத்தை கூறியதை

ஒன்றுமே தெரியாததுபோல்

கேட்டுக்கொண்டிருந்தோமே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

ஒரு மழை நாளில்

என் எல்லாத் துணிகளும்

நனைந்துவிட

உன் சேலையை வேட்டியாக

கட்டிக்கொண்டேனே

உனக்கு நினைவிருக்கிறதா?

 

என் நினைவில் இல்லாத

நாம் சந்தித்துக் கொள்வதற்கு

முன்னரான நம் வாழ்நாட்களை

உனக்கு நினைவிருக்கிறதா?

 

இவற்றையெல்லாம் எப்போதும்

நினைவில் நிறுத்திக்கொள்ள

என்ன செய்யலாம் என யோசித்து

எனக்கு நீ

பரிசளித்த பேனாவை

உனக்கு நினைவிருக்கிறதா?*