34#

*உலகத்தில்

ஒரு பெண்ணுக்கு மட்டுமே

இத்தனை சாயல்கள் இருக்கமுடியும்

அதிலும் நீ விசேஷம்

ஒவ்வொரு முறை பார்க்கும்போதும்

ஒவ்வொரு விதமாயிருக்கிறாய்

ஒவ்வொரு மாதத்துக்கும்

ஒவ்வொரு சேலைக்கும் என்றுகூட

தனித்தனியாய் சாயல்கள் கொண்டிருக்கிறாய்போல…

 

உணர்வுகளால் மட்டுமின்றி

செயல்களாலும் மாறுகிறது உன் முகம்.

குளிக்கையில் ஒருவிதம்

எனக்கு உணவூட்டுகையில் ஒருவிதம்

ஊடல் கொள்கையில் ஒருவிதம்

அது முடிந்து உடல் வேர்க்கையில் ஒருவிதம்

(அதிலும் சில பொறுப்புகளை

உன் வசம்விடும்போது

உன் முகம் போகும்விதம் இருக்கிறதே)

- எல்லா முகங்களையும்விட

 

ஒரு நவம்பர் மாத மழை இரவில்

நான் தோhற்றுவிட்டு அழுதபோது

ஒரு குழந்தையைப்போல வாரி அணைத்து

`என் கப்பலே’ என்று

மடியில் சாய்த்துத் தேற்றினாயே

அப்போதிருந்த அந்த முகம்

இப்போது நினைத்துப் பார்க்கையில்

நீதானா அது என்று

சந்தேகமாகக்கூட இருக்கிறது

தன் சோகங்களைப் புதைத்துக்கொண்டு

அந்த இருட்டிலும்

அவ்வளவு ஒளிவீசிய

அந்த அன்பு முகம்

அதன்பிறகு எவ்வளவோ

நடந்தும் இன்னும் மறக்கவில்லை

ஒரே சமயத்தில்

இவ்வளவாகவும் இருந்துகொண்டு

வேண்டும்போது, தோளில் சுமந்து செல்லும்

தாயாகவும் எப்படித்தான் மாற முடிகிறதோ உன்னால்!*