மழைவால் குருவி

அறைக்குள் நுழையும் போதெல்லாம்
பதறி சன்னல் வழிஓடும் அணில்கூட
இப்போதெல்லாம் அவள் கையில்
உணவருந்துகிறது
பேசிக்கொள்ள மொழிகள் இல்லாவிடினும்
மழைவரப்போவதை குருவிகள் முன்கூட்டியே
அவளிடம் சொல்கின்றன
காற்றுகூட அவள் தலைகோதி ஏதேனும்
சேதி சொல்லித்தான் செல்கிறது
அது கூறியதைக்கேட்டு
இலையுதிர்க்கால மரஙளின் சோகங்களுக்காய்
அழுதிருக்கிறாள் தெரியுமா
மொழிகளின் எல்லைகள் கடந்து
நிலவின் வெளிச்சத்தையும்

காற்றின் வாசத்தையும்
புரிந்துகொள்ள முடிகிற அவளுக்கு
புரிவதுபோல் என்காதலை சொல்ல
இதுவரை முடிவதில்லை…….
ம்…..இந்தக்கவிதைக்காவது வாய்க்கிறதா பார்ப்போம்