ஒரு தேவதூதனின் பழைய கதை

 

முன்னொரு காலத்தில்  ஒரு தேவ தூதன் இருந்தான்.

அவனில் வித்தியாசம் என்வெனில் மற்றவர்கள் தேவதூதர்களாய் ஆக்கப்பட்டவர்கள்.

இவன் தேவ தூதனாய் படைக்கப்பட்டவன்.

அவனிடம் பணமில்லை.பகட்டில்லை,பதவியில்லை.

இந்த நல்லுலகம் கூறும் எந்தத்தகுதிகளும் அவனிடம் இல்லை.

ஆனால் அவனிடம் ஏராளமாய் காதல் இருந்தது.

அதனாலேயே அவனிடம் எல்லாம் இருந்தது.

 

ஒரு நாள் அவன் யுத்தத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

அது துவந்த யுத்தம் என்பது துவங்கிய பின்னரே தெரிந்தது.

இது வரை மேகங்களில் சிறகுகளுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்த அவனுக்கு

போர்க்களத்தின் இரத்தங்களும் முட்களும்,புதிதாய் இருந்தது.

எப்போதும் கவனமாயிருப்பதும்

அடுத்தவர் கவனம் சிதறுவதை சாதகப் படுத்திக் கொள்வதும்

அவன் இயல்புக்கு மாறானவை.

 

போர்க்களத்தில் அம்புகளும்,ஈட்டிகளும்,மழையாய் பொழிந்தன.

அவனிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை.

ஆனால் இயற்கையாய் கிடைத்த கவசங்கள் ஏராளமாய் இருந்தன.

இவன் தன் கவசங்களை மட்டுமே துணையாகக் கொண்டு முன்னேறினான்.

போரின் போது தன் கவசங்கள் ஒவ்வொன்றாக நொறுங்குவதை அவனால் உணர முடிந்தது.

ஆயினும் அம்பையோ ஈட்டியையோ அவன் ஒரு போதும் கைக்கொள்ளவில்லை.

 

 

 

 

ஒரு வழியாக யுத்தம்Ð முடிந்தது.

இந்த உலகையே அவன் வென்று விட்டதாகக் கூத்தாடினர்.

அடைந்த வெற்றிக்கு ஈடாக தன்னையே இழந்து விட்டதாக அவனுக்குத் வுதான்றியது,

 

லேசாக நெஞ்சில் வலிக்கவே குனிந்து பார்த்தான்.

ஒரு அம்பு அவன் கடைசி கவசத்தையும் தகர்த்து ஊடுருவிப் பாய்ந்திருந்தது.

இவ்வளவு ஆழமாகப் பாய்ந்திருப்பதை எப்படிப் பார்க்காமல் விட்டோம் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அது பாய்ந்த வேகத்தில் அவன் இறக்கைகளை இயங்க விடாமல் பண்ணியிருந்தது.

அந்த அம்பு எதிர்பாராத திசையிலிருந்து பாய்ந்திருந்தது.

அப்படியெனில் அவன் சற்றும் எதிர்பாராதொரு வில்லிலிருந்துதான்

அது புறப்பட்டிருக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரிந்தது,

கேள்விக்குறியுடன் அந்தத்திசையில் திரும்பிப் பார்க்க எத்தனித்தான்.

ஏற்கனவே சிறகுகளை இழந்து விட்ட நாம்

ஒரு வேளை அது யாரெனத் தெரிந்தால்

தரையில் நடக்கும் தெம்பையும் இழந்து விடுவோம் என்ற பயத்தில்

அவன் மௌனமாக தன் இறக்கையை இயங்க வைக்கும் முயற்சியில் இறங்கினான்.