என்றைக்காவது ஒருநாள்

 

இவன் ஊரிலிருந்து வெகு தூரத்தில்

ஒரு மரம் இருந்தது
அது பார்ப்பதற்கு பெரியதாகவும் அழகாகவும் இருந்தது
அது இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு முறை இவன்
அதன் அருகில் போக நேர்ந்தது.
அந்த மரத்திற்கும்
இவனை பிடித்து விட்டதால்
அது சுகந்த மணம் வீசியது.
அந்த மணம் இவனுக்கு அமைதி தந்தது.

ஒரு ஏணி கிடைத்தது.
இவன் அந்த மரத்தின் மீது ஏறினான்
அந்த மரம் ஆட்சேபிக்காதோல்
ஏறுவது எளிதாக இருந்தது
இலைகளில் அடர்த்தியால் மரத்தைத் தாண்டி
அவனுக்கு எதுவும் தெரியவில்லை
மரமே உலகமாயிருந்தது.
உலகமே மரமாயிருந்தது.

ஒரு கிளையின் சந்தில்
சற்று இளைப்பாறியபோது
அவனால் கீழே பார்க்க முடிந்தது
அங்கிருந்து பார்ப்பதற்கு ஊர் அழகாகவும்
சிறியதாகவும் வுதான்றியது
மரத்தின் மீதுச ஸீய்ந்து கொண்டு
இலைகளின் வாசத்துக்கு மத்தியில்
உலகத்தைப் பார்த்தது
அவனுக்கு மிகவும் இன்பமாயிருந்தது

எதேச்சையாக திரும்பியபோது
இலைகள் விலகி
அவனுக்கு அருகே-மிக அருகே
ஒன்று வெளிப்பட்டது.
என்னதென்று நிதானிப்பதற்குள்
அவன் அதைப் பறித்து தின்று விட்டான்

நன்றாகத்தானிருந்தது
ஆனால் அதன் பிறகு
அவனிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது
கால்கள் மறைந்து
அவனுக்கு வால் முளைத்தது
மரத்தின் மீதான பார்வை வித்தியாசப்பட்டது
இப்போது நிறைய கனிகள் தென்பட்டன
ஆனால் முன்னர் நுகர்ந்த வாசம் காணப்படவில்லை

குனிந்து பார்த்தான்
ஏணி கீழே விழுந்திருந்தது.
இப்போது உயரம் அவனுக்கு பயம் கொடுத்தது
திரும்ப முடியாததொரு பயணத்தில்
தான் இருப்பதை அவன் உணர்ந்தான்
அதை விட அவனுக்கு
பயம் கொடுத்தது என்னவெனில்
என்றைக்காவது ஒருநாள்
இந்த மரத்தின் கனிகள் தீர்ந்து விடும்போது
அவனோ அல்லது அந்த மரமோ
உயிருடன் இருக்க முடியாது என்பதுதான்